நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் திருச்சி மாவட்ட எஸ்பி-யான வருண்குமாருக்கும் இடையிலான கருத்து மோதல் மீண்டும் கணகணக்க ஆரம்பித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்திப் பேசியதாக புகார் வெடித்தது.
இது தொடர்பாக அவரை கைது செய்த திருச்சி போலீஸார், அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து நாதக மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் குறித்து சீமான் பேசியதாக சர்ச்சைக்குரிய ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. அப்போது இதன் பின்னணியில் திருச்சி எஸ்பி-யான வருண்குமார் இருப்பதாக சீமான் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். இதையடுத்து, வருண்குமார் மற்றும் அவரது மனைவியும், புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி-யுமான வந்திதா பாண்டே ஆகியோரை அநாகரிகமாக விமரிசித்து நாதகவினர் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டனர்.