*தாளவாடி விவசாயிகள் கவலை
சத்தியமங்கலம் : தாளவாடி மலைப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள முட்டைகோஸினை வியாபாரிகள் கிலோ ரூ.2க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலை கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாளவாடி மலைப்பகுதியில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைகாய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தற்போது தாளவாடி, நெய்தாளபுரம், தலமலை, திகினாரை, மல்லன்குழி, பையனாபுரம், பனஹள்ளி, சூசைபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளையும் முட்டைகோஸை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஒரு ஏக்கர் முட்டைகோஸ் பயிரிட ரூ.80 ஆயிரம் வரை செலவாகும் நிலையில் தற்போது தாளவாடி மலைப் பகுதியில் அறுவடை செய்யப்படும் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி காரணமாக ஒரு கிலோ ரூ.2க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தாளவாடி மலைப் பகுதியில் முட்டைக்கோஸ் பயிரிட்ட விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வெளி மார்க்கெட்டில் முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையாகும் நிலையில், வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து முட்டைகோஸ் ரூ.2 க்கு கொள்முதல் செய்வதால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தமிழ்நாடு அரசு வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் முட்டைகோஸை நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post முட்டைகோஸ் கிலோ ரூ.2க்கு கொள்முதல் appeared first on Dinakaran.