சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா காட்டிய வழியில் தொடர்ந்து பணியாற்றிடவும், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்கவும் அதிமுகவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.