மும்பை: மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள போதிலும், மழைப்பொழிவு குறைந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரத் தொடங்கினர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில், மும்பை, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், மும்பையில் மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதோடு, தானே மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தானே மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார்.