திருவாரூர்: மும்மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கள ஆய்வு பணியினை மேற்கொண்டார். கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கோரிக்கையின் பேரில் அங்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் 3.5 ஏக்கர் பரப்பளவில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் வகையில் மேற்கூரையுடன் கூடிய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்காக ரூ.18 கோடியில் 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 குடோன்கள் அமைக்கப்பட உள்ளன.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தீர்ப்பதற்கு 4 அமைச்சர்கள் கொண்ட குழு மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். மும்மொழி கொள்கை எதிர்ப்பு, நிதி பகிர்வு மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு போன்ற பிரச்னைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்த பிரச்னைகளை திசை திருப்புவதற்காக டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் குடோன்களில் ஒன்றிய அரசானது அமலாக்க துறையினை தனது ஏஜெண்டாக பயன்படுத்தி வருகிறது.
இதன் முடிவில் உண்மை தெரிய வரும். மேலும் நீட் தேர்வு விலக்குக்காக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் திமுக சார்பில் நடத்தப்பட்ட போது மாணவர்களை தவிர்த்து தான் கையெழுத்து பெறப்பட்டது. ஆனால் பாஜகவோ மிஸ்டு கால் மூலம் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை என்று ஏற்கனவே தெரிவித்ததை போன்று தற்போது மும்மொழி கொள்கைக்காக சிறுகுழந்தைகளிடம் கூட கையெழுத்து இயக்கத்தினை நடத்தி வருகின்றனர். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
* நரிக்குறவர் குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வீரன் நகரில் நரிக்குறவர் சமுதாய மக்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் யாருக்கும் பட்டா இல்லை. இவர்கள் பட்டா கேட்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இங்கு வசிக்கும் 77 குடும்பத்திற்கு கொருக்கை கிராமத்தில் தாட்கே மூலம் வீடு கட்டுவதற்கு நிதி ஒதுக்கி அதற்கான இலவச பட்டா மற்றும் 24 பேருக்கு தாட்கோ வாரிய அடையாள அட்டையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வழங்கினார்.
The post மும்மொழி, நிதி பகிர்வு, தொகுதி சீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் ஈ.டி ரெய்டு நடக்கிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.