கோவில்பட்டி: முறையான பராமரிப்பு இல்லாததால் கடந்த 2 மாதமாக நம்பிபுரம் தடுப்பணையில் தண்ணீர் வீணாக வெளியேறி ஆற்றில் கலக்கிறது. ஆனால் இதனை நீர்வளத்துறையினர் கண்டு கொள்ளாததால் கோடை காலத்தில் குடிநீர், பாசன தேவைகளுக்கு தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா அயன்ராஜாபட்டி, மாசார்பட்டி, கீழ்நாட்டுக்குறிச்சி, இனாம் அருணாசலபுரம், முத்தலாபுரம், தாப்பாத்தி, அயன்வடமலாபுரம், கீழநம்பிபுரம், வேடப்பட்டி, பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம் தாலுகா அம்மன் கோவில்பட்டி முதல் வைப்பாறு கிராமம் வரை ஆற்றுப்படுகையின் இருபுறமுள்ள 60க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக வைப்பாறு ஆறு இருந்து வருகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வைப்பாற்றில் இருந்து பல கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டுக்கு முன்பு வரை மழைக்காலங்களில் போதிய மழை பெய்யாததால் தண்ணீர் வரத்து குறைந்து நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வைப்பாறு வறண்டது. மேலும் ஆற்றுப்படுகையோரம் உள்ள தோட்டப் பாசன நிலங்களின் குடிநீர் கிணறுகள் வறண்டு போனதால் சாகுபடி செய்ய முடியவில்லை. இதனால் குடிநீருக்கு வல்லநாடு கூட்டுக் குடிநீர் திட்டத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வைப்பாற்றில் அயன்ராஜாபட்டி, கீழ்நாட்டுக்குறிச்சி, முத்துலாபுரம், நம்பிபுரம், ஆற்றங்கரை போன்ற இடங்களில் மணல் குவாரி செயல்பட்டதால் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டும், ஆற்றுப்படுகையோர கிராம மக்கள் மற்றும் கால்நடைகள் குடிநீருக்காகவும் கீழ் நாட்டுக்குறிச்சி, நம்பிபுரம், ஆற்றங்கரை போன்ற 11க்கும் மேற்பட்ட இடங்களில் வைப்பாற்றின் குறுக்கே கடந்த 2013ம் ஆண்டு தரைமட்டத்தில் இருந்து 8 அடி உயரத்தில் 8 கோடி திட்ட மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது.
நம்பிபுரம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் முத்துலாபுரம், தாப்பாத்தி, கோட்டூர், அயன்வடமலாபுரம், கருப்பசாமி கோவில்பட்டி போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் தேவையை கடந்த பல ஆண்டுகளாக பூர்த்தி செய்து வருகிறது. கடந்த டிசம்பர் 12ம்தேதி மற்றும் 16 ஆகிய தேதிகளில் பெய்த பெரு மழைக்கு வைப்பாற்றில் கட்டப்பட்டுள்ள நம்பிபுரம் தடுப்பணை உட்பட அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் வரக்கூடிய கோடையில் ஏற்படும் தண்ணீர் தேவையை முழுமையாக சமாளித்து விடும் என்று கருதினர். நம்பிபுரம் தடுப்பணை முழுவதுமாக நிரம்பி வரத்து அதிகம் ஏற்படும் போது அணையை பாதுகாக்க தெற்கு மற்றும் வடக்கு கரையில் தனித்தனியே நான்கு ஷட்டர்கள் பொருத்தப்பட்டு அதிக வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது தண்ணீர் திறந்து விட ஷட்டர் அமைக்கப்பட்டது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 12ம்தேதி பெய்த பெரு மழைக்கு நிரம்பி வழிந்தது. வடக்கு கரையோரம் உள்ள 2வது ஷட்டரில் அடிப்பாகம் இரும்பு ராடு உடைந்து கடந்த 2 மாத காலமாக ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக ஆற்றில் செல்கிறது. இதனால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இவை தடுப்பணையின் சிமெண்ட் சுவரில் 2 இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அணை பாதுகாப்புக்காக 2 கரையிலும் முண்டுக்கல் பதிக்கப்பட்டுள்ளது. முறையாக பராமரிக்காததால் கல்லணைக்கு இடையிடையே வேலி மரங்கள் முளைத்து கரையின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் தென்புறம் கரையருகே ஷட்டரை சுற்றி வேலி மரங்கள் முளைத்து காணப்படுகிறது. தடுப்பணை கட்டி கடந்த 11 ஆண்டுகளில் ஒரு முறை கூட பராமரிப்பு பணி விளாத்திகுளம் நீர்வளதுறை செய்யவில்லை. தடுப்பணை கட்டியதோடு சரி இன்று வரை திரும்பிக் கூட பார்த்தது இல்லை.
எனவே வைப்பாறு வடிநிலக்கோட்டம் நீர்வளத்துறை உடனடியாக வீணாக வெளியேறும் தண்ணீரை அடைத்து, சிமென்ட் சுவரில் ஏற்படும் கசிவையும் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
The post முறையான பராமரிப்பு இல்லாததால் நம்பிபுரம் தடுப்பணையில் தண்ணீர் வீணாக வெளியேறும் அவலம்: கண்டுகொள்ளாத நீர்வளத்துறை appeared first on Dinakaran.