ஆரம்ப கால தமிழ் சினிமாவின் அழகான, கவர்ச்சியான கதாநாயகர்களில் ஒருவர், ஸ்ரீராம். திரைத் துறைக்காக மதுரையில் இருந்து சென்னை வந்த அவர், ஜெமினியின் ‘சந்திரலேகா’ படத்தில் குதிரை வீரனாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தின் டைட்டில் கார்டில் கூட அவர் பெயர் இடம்பெறவில்லை. தொடர்ந்து துணை நடிகராக நடித்து வந்த அவரது முழுப் பெயர், மதுரை ஸ்ரீராமுலு நாயுடு. கோவை பக்‌ஷிராஜா ஸ்டூடியோ உரிமையாளரின் பெயரும் அதுவாகவே இருந்ததால் தனது பெயரை 'ஸ்ரீராம்' என்று மாற்றிக்கொண்டார்.
பின்னர், இயக்குநர் கே.வேம்புவின் பழக்கம் கிடைத்ததால், அவர் எழுதி, இயக்கிய ‘மதனமாலா’ (1948) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் ஸ்ரீராம். அதாவது ராஜகுமாரனாக நடித்தார். இந்த கதாபாத்திரம் கவனிக்கப்பட்டது. பின்னர் நவஜீவனம் (1949), சம்சாரம் (1951), மூன்று பிள்ளைகள் (1952) போன்ற படங்களில் நடித்த அவர், எம்.ஜி.ஆரின் ‘மலைக்கள்ளன்’ (1954) படத்தில் வில்லனாகவும் சிவாஜியின் ‘பழனி’ (1965) படத்தில் சகோதரர்களில் ஒருவராகவும் நடித்தார்.