சென்னை: தமிழகத்தில் உள்ள வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தை சென்னையில் வரும் ஆக.12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடு தேடிச் சென்றடையச் செய்யும் தமிழக அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆக.12-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.