சென்னை: சென்னையில் மகளிர் சுயஉதவி குழுக்களின் உணவு திருவிழாவையொட்டி, மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களை ஊக்குவிக்கவும், பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உணவு திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 20-ம் தேதி தொடங்கி வைத்தார்.
உணவு திருவிழாவை ஆர்வத்துடன் காணவும், ஆசையுடன் உணவு உண்டு மகிழவும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கரூர் நாட்டுக்கோழி பிரியாணி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, சிவகங்கை மட்டன் உப்புக்கறி, மதுரை கறி தோசை, நாமக்கல் முடவாட்டு கிழங்கு சூப், கன்னியாகுமரி பழம்பொறி, குதிரை வாலி புலாவ், சிந்தாமணி சிக்கன், பருப்பு போளி, தேங்காய் போளி, களி கருவாட்டு குழம்பு, ராகி இட்லி, நெய் சாதம் – மட்டன் கிரேவி போன்ற உணவுகளை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.