மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட அண்ணமார் நகர், கரியகாளி நகர், செந்தூர் நகர், மொடக்குறிச்சி மையப்பகுதி, மொடக்குறிச்சி நால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய கழிவு நீர் மொடக்குறிச்சி மையப் பகுதியில் அமைந்துள்ள எம்எல்ஏ ஆபீஸ், நூலகம், போலீஸ் நிலையம், அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளிகள், கோயில் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளின் வழியாக கழிவுநீர் செல்கிறது.
இதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் மாசு ஏற்பட்டு வருகிறது. மொடக்குறிச்சி மைய பகுதியில் கழிவுநீர் மாசு ஏற்படாத வகையிலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காத வகையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பேரூராட்சிகளுக்கென கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மை இந்தியா திட்டம் (2024-25) கீழ் ரூ.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நலத்திட்ட மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட தூரபாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட தூரபாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்த பின்பு இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பின்னர் அதே ஓடையில் நீர்களை திறந்து விடப்படும். இதனால், சுற்றுச்சூழல் மாசு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் மாசு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்படும்.
இதுகுறித்து மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணன் கூறியதாவது:
மொடக்குறிச்சி பேரூராட்சியை பொறுத்தவரை மொடக்குறிச்சி தொகுதியின் தலைமை இடமாக உள்ளது. மொடக்குறிச்சி மையப்பகுதியில் கழிவுநீர் செல்வதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. அதேபோல் நிலத்தடி நீர்மட்டமும் மாசு ஏற்பட்டு வருகிறது. இதனால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, எம்பி பிரகாஷ் ஆகியோரிடம் ஒப்புதல் பெற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மூலம் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.
இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பேரூராட்சிகளுக்கென மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஆறு மாத காலத்திற்குள் முடிவு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.6 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: 6 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் appeared first on Dinakaran.