ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேரளா – குஜராத் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் கேரளா 457 ரன்கள் குவித்தது. முகமது அசாருதீன் 177, கேப்டன் சச்சின் பேபி 69, சல்மான் நிஷார் 52 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து விளையாடிய குஜராத் அணி 4-வது நாள் ஆட்டத்தில் 154 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 429 ரன்கள் சேர்த்தது. ஜெய்மீத் பட்டேல் 74, சித்தார்த் தேசாய் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கைவசம் 3 விக்கெட்கள் இருக்க முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதற்கு மேற்கொண்டு 29 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 174.4 ஓவர்களில் 455 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜெய்மீத் பட்டேல் 79, சித்தார்த் தேசாய் 30, அர்ஸன் நக்வாஸ்வாலா 10 ரன்களில் அவுட்டானார்கள். இந்த 3 விக்கெட்களையும் நெருக்கடியான சூழ்நிலையில் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஆதித்யா சர்வதே வீழ்த்தினார்.