சென்னை: ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் பெட்ஷீட் 15 நாட்களுக்கு ஒரு முறை துவைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை போக்குவரத்து துறையாக இந்திய ரயில்வே உள்ளது. வசதியான பயணம், கட்டணக் குறைவு உள்ளிட்ட பல காரணங்கள் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். குறிப்பாக தொலைதூர பயணங்கள் என்று வரும்போது ரயில் பயணங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அம்சங்களை செயல்படுத்தி வருகிறது. அதே போல் ரயில்வே துறை மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம், ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்கப்படுகிறது என ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு ரயில்வே அமைச்சகத்தின், ஹவுஸ் கீப்பிங் மேலாண்மை பிரிவு அதிகாரி ரிஷு குப்தா தெரிவிக்கையில், ‘கீழே விரிக்க கொடுக்கப்படும் போர்வைகள் ஒவ்வொரு முறையும் துவைக்க அனுப்பி வைக்கப்படுகிறது, கம்பளிகள் மாதத்திற்கு ஒருமுறை துவைக்க அனுப்பப்படுகிறது’’ என தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து ரயில்வே துறை சார்ந்த ஊழியர்கள் தெரிவிக்கையில் பல அதிர்ச்சியான விஷயங்கள் வெளியானது. அதாவது, பெரும்பாலும் போர்வைகளில் அழுக்கு, கறை, துர்நாற்றம், ஈரப்பதம் இல்லையெனில் அவை மடித்து மீண்டும் பயன்பாட்டுக்காக ரயில் பெட்டியிலேயே வைக்கப்படும். அழுக்கு இருந்தால் மட்டும் அவை துவைப்பதற்கு போடப்படும். என தெரிவிக்கப்பட்டிருந்தது பல விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. அதற்கு ரயில்வே அமைச்சர், ரயில்களில் பயன்படுத்தப்படும் பெட்சீட் மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படும் என அதிர்ச்சி தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
தெற்கு ரயில்வே எப்போதும் பயணிகளின் வசதி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து, அதன் சேவைகள் சிறந்து விளங்குவதை உறுதி செய்கிறது. ஆண்டுதோறும் 600 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயணிப்பதால், தெற்கு ரயில்வே பல்வேறு முயற்சிகள் மூலம் பயண அனுபவத்தை மேம்படுத்தி வருகிறது. ஏசி பெட்டிகளுக்குள் உள்ள வெப்பநிலை வசதியான 24°C ல் பராமரிக்கப்படுகிறது, இது பயணிகளின் வசதியை உறுதி செய்கிறது.
அதே நேரத்தில் கனமான போர்வைகளை சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், போர்வைகளை சுத்தம் செய்யும் அதிர்வெண் படிப்படியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. 2010ல் 3 மாத கால சுழற்சியில் இருந்து, 2 மாதங்களாக குறைக்கப்பட்டு, 2016ல் இருந்து 15 நாட்களாக குறைக்கப்பட்டது. தளவாட சவால்கள் உள்ள பகுதிகளில், சுத்தம் செய்யும் சுழற்சி 20-30 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம். தற்போது, பேசின் பிரிட்ஜ் பூட் லாண்டரி (ஒரு ஷிப்டுக்கு 6 டன் திறன்) மற்றும் கொச்சுவேலி பூட் சலவை (ஒரு ஷிப்டுக்கு 3 டன் திறன்) சராசரியாக 26 டன் உயர்தர லினன் (23,000 செட்) தினசரி வழங்குகின்றன. நாகர்கோவில் மற்றும் எர்ணாகுளம் பூட் லாண்டரிகள் ஒரு ஷிப்டுக்கு 2 டன் திறன் கொண்டவை, இது தற்போது மேலும் 5,200 பெட்டிகள் ஆகும்.
மேலும், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் மங்களூரில் திட்டமிடப்பட்டுள்ள பூட் (BOOT) சலவைகள், தினசரி கூடுதலாக 7,800 கைத்தறிகளை கையாளும். இயந்திரமயமாக்கப்பட்ட சலவைகள் சிறந்த தரமான சலவை மற்றும் சுத்திகரிப்பு செயல்முறைகளை உறுதி செய்கின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் பெட்ஷீட் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் துவைக்கப்படுகிறது: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.