சென்னை: கர்நாடகம் மட்டுமின்றி, கேரளமும் பல ரயில்வே திட்டங்களுக்கான செலவுகளை ரயில்வேத் துறையுடன் பகிர்ந்து கொள்கிறது. இவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, முதன்மையான ரயில்வே திட்டங்களுக்கான செலவில் பாதியை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கர்நாடகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 9 புதிய ரயில்வே பாதைத் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில், அவற்றின் மொத்த மதிப்பில் 50 விழுக்காட்டை அம்மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் சித்தராமய்யா அறிவித்திருக்கிறார். இதனால், கர்நாடகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டப்பணிகள் முன்கூட்டியே நிறைவேற்றி முடிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதேபோன்ற முன்முயற்சிகளை மேற்கொள்ள தமிழகத்தை ஆளும் திமுக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.