சென்னை: ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் இன்று (டிச.4) தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது. சென்னையில் 38 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ரயில்வேயில் முதல்முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) 43 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகார தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டு, செயல்படுகிறது.
கரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதற்கிடையில், ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் வரும் டிச.4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ரயில்வே வாரியம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.