லண்டனில் தனது சிம்பொனியை மார்ச் 8ஆம் தேதி அரங்கேற்ற, வியாழன் (மார்ச் 6) அன்று விமானம் ஏறிவிட்டார் இளையராஜா. “சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவது எனக்கான பெருமை அல்ல; நாட்டின் பெருமை” என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டது நூறு சதவீதம் உண்மை. இளையராஜாவின் சிம்பொனி சாதனைக்குப் பின்னே, பேசப்பட வேண்டிய வரலாறு உண்டு.
வெளிவராத சிம்பொனி: 1993இல் இளையராஜா தனது முதல் சிம்பொனியை அமைக்கப்போகிறார் என்கிற செய்தி, இந்தியா முழுவதும் அனைத்து இதழ்களிலும் பரபரப்புச் செய்தியாக மாறியது. தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களும் அது குறித்து விரிவாக எழுதின. நாடாளுமன்றத்தில் இளையராஜாவின் சிம்பொனி குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து, பாராட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைகோ முன்வைத்தார்.