ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனப்பாக்கம் பகுதியில் 1,312 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 470 ஏக்கர் நிலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இங்கு முன்னணி கார் கம்பெனியான லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் பிராண்டில் சொகுசு கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த நிறுவனம் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைகிறது. இங்கு எலக்ட்ரானிக் சொகுசு கார்களும் தயாரிக்கப்படப்பட உள்ளது. இந்த வகையான கார்களுக்கான உதிரிபாகங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து, இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, இங்கு அமைய உள்ள தொழிற்சாலையில் கார்களின் அனைத்து பாகங்களும் இங்கேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராணிப்பேட்டை சிப்காட்டில் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைக்க டாடா நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக டாடா நிறுவனம் ரூ.914 கோடியில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. 190 ஹெக்டேரில் அமையும் கார் உற்பத்தி ஆலையால் முதல் கட்டமாக 1,650 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான கட்டுமான பணி 15 மாதங்களில் முடிவடையும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 2.5 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் இருக்கும் என்றும், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் உற்பத்தி இலக்கும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
The post ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட்டில் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி: 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.