திண்டிவனம்: பாமக இளைஞரணி தலைவர் பதவியை ராமதாஸ் பேரனுக்கு வழங்குவது குறித்து அக்கட்சி தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் அரசியல் வாரிசுகள் தேர்தலில் களம் காண்பதும், அவர்களை ஏற்பதும், நிராகரிப்பதும் மக்களின் கையில் உள்ளது. பெரும்பாலான வாரிசுகள் வழிமரபுகளின்படி அரசியலில் நிலை நின்றாலும் குறிப்பிட்ட காலத்திற்குபின் சறுக்கலை சந்தித்து அரசியலைவிட்டே ஒதுங்கிய வரலாறும் வடமாநிலங்களில் உள்ளது.
இதனிடையே தென்மாநிலங்களான தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அரசியல் களத்திலும் வாரிசுகள் அதிகளவில் ஜொலித்து வருகின்றனர். விமர்சனங்களை கடந்தும் அவர்களுக்கு தேர்தல் களத்தில் மக்கள் ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதையும் காணமுடிகிறது. அந்த வகையில் தற்போது பாமகவிலும் 3ம் தலைமுறை அரசியல் வாரிசு புதிதாக களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாமக தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டதையடுத்து, இளைஞரணி தலைவர் பதவி காலியாகவே இருந்தது. அப்பதவிக்கு ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்டாலும், அதிகார மையங்களுக்குள் எழுந்த பிரச்னையை சமாளிக்க முடியாமல் அதிலிருந்து விலகினார்.
இதன் காரணமாக அப்பதவி தொடர்ந்து நிரப்பப்படாமல் இருந்த நிலையில் பாமக இளைஞரணி புதிய தலைவராக ராமதாசின் மூத்த மகள் காந்திமதியின் மகனும், அவரது பேரனுமான முகுந்தனை (40) நியமிக்கும் முடிவில் பாமக தலைமை இருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மாநில சமூக ஊடக பேரவை செயலாளராக முகுந்தன் தேர்வு செய்யப்பட்டார். சமீபகாலமாக அரசியலில் ஆர்வம் காட்டிவரும் முகுந்தனுக்கு அப்பதவியை வழங்கும்பட்சத்தில் ஆட்சேபனை எழ வாய்ப்பில்லை என்பதால் இதுபற்றி ராமதாஸ் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு கட்சித் தலைமையிடம் இருந்து வெளியாகலாம் எனவும் பாமக முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
The post ராமதாஸ் பேரனுக்கு பாமகவில் இளைஞரணி தலைவர் பதவி? appeared first on Dinakaran.