சென்னை: “ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழிப்பீர்களா என்று எங்களைப் பார்த்து கேட்கும் அதிமேதாவிகளான உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம், ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கத் தயக்கம் ஏன்? தமிழ் மீது பிரதமர் உள்ளிட்ட ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் உயர்தனிச் செம்மொழி என்ற தகுதியுடைய எங்கள் தாய்மொழியை ஆட்சிமொழியாக்கிட எது தடுக்கிறது?” என திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள 9-வது கடிதத்தின் விவரம்: மொழிவழி மாநிலங்களாக உருவாக்கப்பட்ட இந்திய ஒன்றியத்தில், ஒரு மாநிலத்தில் பேசப்படும் மொழி மீது மற்றொரு மொழியைக் கட்டாயமாகத் திணிக்கும்போது அந்த மாநில மக்கள் பேசுகின்ற மொழியும் அதன் பண்பாடும் சிதைக்கப்படும்.