குஜராத் கடல் பகுதியில் கடத்தல் கும்பலால் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருளை கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) போலீஸார் கைப்பற்றினர். வெற்றிகரமான இந்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக குஜராத் ஏடிஎஸ் பகிர்ந்து கொண்ட தகவலின் அடிப்படையில் கடலோர காவல் படையின் ஒரு கப்பல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சர்வதேச கடல் எல்லைப் பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக ஒரு படகை கடலோர காவல் படை வெற்றிகரமாக அடையாளம் கண்டது.