சத்தீஸ்கர் மாநிலத்தில் 17 மாவோயிஸ்டுகள் நேற்று சரண் அடைந்தனர். இவர்களில் 9 பேர் ரூ.24 லட்சம் பரிசுத் தொகையுடன் தேடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிஜப்பூர் சீனியர் எஸ்.பி. ஜிதேந்திர குமார் யாதவ் கூறியதாவது: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 17 பேர் நேற்று சிஆர்பிஎப் போலீஸாரிடம் சரணடைந்தனர். இவர்களில் 9 பேர் மொத்தம் ரூ.24 லட்சம் பரிசுத் தொகையுடன் தேடப்பட்டவர்கள். மாவோயிஸ்ட் கொள்கைகளால் தாங்கள் ஏமாற்றம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பாவி பழங்குடியினரை மாவோயிஸ்ட் சீனியர் தலைவர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர். நக்சல் பாதிப்பு பகுதியில் கொண்டு வரப்பட்ட ‘உங்கள் நல்ல கிராமம்’ திட்டம் மாவோயிஸ்ட்களை ஈர்த்துள்ளது. அதனால் அவர்கள் சரணடைந்துள்ளனர்.