சென்னை: வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் முன்மொழிகிறார். வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை கலைவதாக கூறி கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய சட்டத் திருத்தத் மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால் சட்டத்திருத்த மசோதா பாஜக எம்.பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. குழுவில் மக்களவையிலிருந்து 21 பேர் மாநிலங்களவையிலிருந்து 10 பேர் என பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட காட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றனர். தொடர்ந்து ஆய்வு கூட்டங்களும் நடைபெற்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் தெரிவித்த 14 திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து 655 பக்க அறிக்கை தயாரானது. அதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெரும்பான்மை ஓட்டு அடிப்படையில் அறிக்கையை கூட்டுக்குழு ஏற்றுக்கொண்டது. கூட்டுக்குழுவின் அறிக்கையை அதன் உறுப்பினரான பாஜக எம்.பி மேதா பிஸ்ராம் குல்கர்னி மாநிலங்களவையில் கடந்த மாதம் 13 ஆம் தேதி தாக்கல் செய்தார். அப்போது தங்களது அதிருப்தி கருத்துகள் நீக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டத்திருத்த மசோதாவில் ஒரு உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று கூறினர். அனால் அவர்களது குற்றசாட்டுகளை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு திட்டவட்டமாக மறுத்தார். தொடர்ந்து கூட்டுக்குழு அறிக்கை மக்கலவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத நபர்கள் 4 பேர் வரை சேர்க்க கூட்டுக்குழு அறிக்கையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
பிரச்சனைகளை விசாரிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து மணிலா அரசால் நியமிக்கப்படும் மூத்த அதிகாரிக்கு மாற்றவும் கூட்டுக்குழு பரிந்துரை செய்தது. கூட்டுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. அதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிகிறது. அதே போல மாநிலங்களவையிலும் வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இந்நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம் கொண்டு வருகிறது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் முன்மொழிய உள்ளார். வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து ஏற்கனவே கேரள, கர்நாடக மாநில அரசுகள் தனித்தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில் இன்று தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
The post வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம்: இன்று சட்டப்பேரவையில் முன்மொழிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.