சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வரும் 10-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதன் தாக்கத்தால் அங்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, 11-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை – தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.