வடலூர்: வடலூர் காவல் நிலையத்தில் மத ஒற்றுமையுடன் மும்மதத்தினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நாடு முழுவதும் தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் விவசாயம் செழிப்பதற்கும் தமிழர்களின் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தின் வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல்துறையினர் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
வடலூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமை தாங்கினார்.உதவி ஆய்வாளர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். மேலும் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சேலை அணிந்து விறகு அடுப்பு மூட்டி புது பானையில் பால் ,பச்சரிசி வெள்ளம் ,முந்திரி ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை வைத்து பொங்கல் வைத்து அதனை பாரம்பரிய முறையில் வாழை இலையில் வைத்து படையல் இட்டனர்.
இந்த விழாவில் மத வேறுபாடு இன்றி இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் ஆகியோர் கலந்துகொண்டு தங்களின் முறைப்படி பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் தைத்திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் அனைவருக்கும் பொங்கல் பரிசினை டிஎஸ்பி சபியுல்லா வழங்கினார். நகர மன்ற உறுப்பினர் ஷாகுல் ஹமீது, அருட்தந்தை இயேசு ராஜா,ஏசுதாஸ், அபுதாஹிர்,ஹக்கிம், முகமது இப்ராஹிம் மற்றும் காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post வடலூர் காவல் நிலையத்தில் மத ஒற்றுமையுடன் மும்மதத்தினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா; நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.