தஞ்சாவூர்: வரத்து குறைவு காரணமாக தஞ்சையில் பீன்ஸ், அவரைக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகளவில் குறிப்பிட்ட நேரத்தில் கொட்டி தீர்த்தன. இதனால், நெல், உளுந்து, வேர்க்கடலை, மக்காச்சோளம், கத்தரி, பீன்ஸ், அவரை, வாழை உள்ளிட்ட வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் பெருத்த சேதம் அடைந்தன. தக்காளி, பூண்டு, வெங்காயம், அவரை, பீன்ஸ், கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் உற்பத்தி குறைந்து, வரத்து குறைந்தது.
இதனால், காய்கறி விலை அடிக்கடி உச்சத்தை தொட்டு இல்லத்தரசிகளை அச்சமடைய செய்து வருகிறது. அதில், கடந்த வாரம் 90 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ் மற்றும் அவரைக்காய் விலை படிப்படியாக உயர்ந்து நேற்று பீன்ஸ் கிலோ ரூ.110-க்கும், அவரை 120க்கும் விற்றது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ஓசூர் மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் இருந்து பீன்ஸ் அதிக அளவு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் பீன்ஸ் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்துள்ளது. இதனால், இந்த விலை ஏற்றம் காணப்படுகிறது. தினசரி 150 மூட்டைகளுக்கு குறையாமல் வரும் பீன்ஸ் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால், சந்தைக்கு வந்த உடனேயே வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி சென்று விடுகின்றனர். தற்போது மழை நின்று வெயில் அடிக்கடி தொடங்கி விட்டதால் பீன்ஸ் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றனர்.
The post வரத்து குறைவால் தஞ்சையில் பீன்ஸ், அவரை விலை கடும் உயர்வு appeared first on Dinakaran.