வாஷிங்டன்: பாதிக்கப்பட்ட நாடுகளின் எதிர்ப்பு, பரந்த அளவிலான வர்த்தகப் போர் பற்றிய அச்சங்களுக்கு மத்தியில் மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிக அளவு வரி விதிக்கப்படும் என்பதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், இதற்கான காலக்கெடுவைத் தாமதப்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மெக்சிகோவும் கனடாவும் புலம்பெயர்வு மற்றும் ஃபெண்டனில் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்று தெரிவித்திருந்தார். பேச்சுவார்த்தைகளுக்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று அதிபரிடம் கேட்கப்பட்ட போது, அந்த யோசனையை அவர் நிராகரித்தார். "இல்லை… இல்லை… தற்போது அதற்கு வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.