வருசநாடு: தேனி மாவட்டம், வருசநாடு அருகே, கோம்பைத் தொழு மலையடிவாரத்தில் மேகமலை சின்னச்சுருளி அருவி அமைந்துள்ளது. இங்கு தினசரி 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து குளித்துச் செல்கின்றனர். கோம்பைத் தொழு கிராம் ஊராட்சி சார்பில், அருவியில் இருந்து 2 கி.மீ தூரத்தில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல, பொதுமக்களுக்கும் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் சோதனைச்சாவடியில் வாகனங்களை நிறுத்தும் வனத்துறையினர், அங்கிருந்து 2 கி.மீ தூரத்துக்கு அருவிக்கு நடந்து செல்ல சொல்கின்றனர். ஆனால், ஒரு சில சொகுசு வாகனங்களை அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் அருவியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதையடுத்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது இந்நிலையில், அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேகமலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது குறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்ததால், கட்டண வசூலை ரத்து செய்ய வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியும் பெற்றுள்ளது.
இது குறித்து சுற்றுலாப் பயணி சுபாஷ் என்பவர் கூறுகையில், ‘சுற்றுலாப் பயணிகள் சோதனைச் சாவடியில் இருந்து அருவிப் பகுதிக்கு சென்று வருவதற்கு பேட்டரி கார் வசதி செய்ய வேண்டும். கடமலைக்குண்டுவைச் சேர்ந்த தமிழ்நாடு தென்னை விவசாயம் சங்க மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன் கூறுகையில், ‘சின்னசுருளி அருவியில் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கு உத்தரவு பிறப்பித்த தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங்குக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.
The post வருசநாடு அருகே சின்னச்சுருளி அருவியில் குளிக்க அனுமதி: அடிப்படை வசதி செய்து கொடுக்க கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.