வடசென்னையின் ராயபுரம் பகுதியில் அய்யாவு (ராதா ரவி), ஜான் (சரண்ராஜ்) இருவரும் தண்ணீர் கேன் வியாபாரிகள். தொழில்போட்டி இருந்தாலும் சுமுகமாக இருக்கிறார்கள். ஆனால், ஜானின் மனைவி ராணியும் ( மகேஸ்வரி) மைத்துனர் டப்பாவும் (ஷங்கர் நாக்) அய்யாவுவின் தொழிலைச் சரிக்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக அய்யாவுவிடம் கேன் டெலிவரி பையன்களாக வேலை செய்யும் தில்லை (துஷ்யந்த்), மருது (பிரியதர்ஷன்) இருவரது வாழ்க்கையில் பல வகையிலும் உரசுகிறார்கள். அது மோதலாக உருவெடுத்து ரத்தம் தண்ணீரைப் போல் ஓட, இறுதியில் யார் கை ஓங்கியது என்பதைச் சொல்லும் கதை.
தண்ணீர் ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரப் பொருளாக மாறிய பின்னர், அதில் பணம் பண்ணும் சிறு முதலாளிகள், அவர்களிடம் வேலை செய்யும் சாமானியர்கள் ஆகியோரின் உலகில் மலிந்திருக்கும் தொழில் போட்டியையும் அதனால் விளையும் வன்மத்தையும் வடசென்னையின் வாழ்க்கைப் பின்னணியில் சித்தரிக்கிறது திரைக்கதை.