வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், அன்று மாலை அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்தது. இதையடுத்து நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும் 24-ம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 8 செமீ மழை பதிவானது.