திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி பகுதியில் வளர்ப்பு மகளை தொடர்ந்து பலாத்காரம் செய்ததாக தந்தை மீது புகார் எழுந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வளர்ப்பு மகளை தந்தையே பலாத்காரம் செய்து வந்துள்ளது தெரிய வந்தது.
இது தொடர்பான வழக்கு மஞ்சேரி விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எம்.அஷ்ரப், குற்றம் புரிந்த தந்தைக்கு 141 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். போக்சோ சட்டம், ஐபிசி, குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் அதிகபட்ச தண்டனையாக அவர் 40 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மற்ற ஆண்டுக்கான சிறை தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அத்துடன் ரூ.7.85 லட்சம் அபராதம் செலுத்தவும், கடந்த 29-ம் தேதி நீதிபதி அஷ்ரப் தீர்ப்பளித்தார்.