திருச்சி: “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் காரணம் என விஜய் கூறியிருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி எந்த அழுத்தமும் எனக்கு திமுக தரப்பிலிருந்து கொடுக்கப்படவில்லை. அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் அளவுக்கு நானோ அல்லது விசிகவோ பலவீனமாக இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் நினைவு நாளில், அம்பேத்கரின் நூலை வெளியிட்டிருப்பதும், அவரைப் பற்றி பேசியிருப்பதும் பெருமை அளிக்கிறது. இன்றைக்கு பொது நீரோட்டத்தில் அம்பேத்கர் வெகுவாக பேசப்படுகிறார். அந்த வரிசையில் விஜய்யும் இணைந்திருப்பது வரவேற்புக்குரியது.