விருதுநகர்: விருதுநகர் அருகே தாதபட்டியில் மோகன் ராஜ் என்பவருக்கு சொந்தமான சத்யபிரபு பட்டாசு ஆலை உள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பட்டாசு ஆலையில் வழக்கம் போல் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பிற்பகல் திடீரென உராய்வின் காரணமாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்து தரைமட்டமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் பலத்த தீக்காயத்துடனும், 3 பேர் லேசான தீக்காயத்துடனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று தீயணைப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு பெண் தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஏற்கனவே 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
10க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலுமாக தரைமட்டமான காரணத்தினால் இடிபாடுகளில் சிக்கி வேறு யாரேனும் உயிரிழந்திருக்கிறார்களா என்பது குறித்து இடிபாடுகளை அகற்றியபோது தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post விருதுநகர் அருகே தாதபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.