விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் இதுவரை கண்டிராத மழையை சந்தித்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலலின் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்;
விழுப்புரம் மாவட்டம் இதுவரை கண்டிராத மழையை சந்தித்துள்ளது. புயல் சென்ற அனைத்து இடங்களிலும் வழக்கத்தைவிட அதிக அளவு மழை பெய்துள்ளது. புயல் அறிவிப்பு வெளியான உடனேயே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள், அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்துள்ளது. 7 தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள், 8 மாநில பேரிடர் குழுக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு பணி மேற்கொண்டுள்ளது.
மேலும், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் 631 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்விநியோகத்தை சீரமைக்க 10ஆயிரம் மின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 மாவட்டங்களில் 7826 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், தி.மலை, கடலூர் மாவட்டங்களில் 637 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் 147 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் 3.18 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு, மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், விரிவான ஆய்வுக்கு பிறகே முழுமையான சேத விவரம் தெரிய வரும். ஃபெஞ்சல் புயல் சேதம் குறித்து விரைவில் ஒன்றிய அரசுக்கு அறிக்கை அளிப்போம். மத்திய குழுவை உடனே அனுப்பும்படி ஒன்றிய அரசிடம் கோர உள்ளோம். ஒன்றிய அரசு உதவி செய்யாவிட்டாலும் தமிழ்நாடு அரசு நிலைமையை சமாளித்து வருகிறது. எந்த ஆட்சியில் மக்கள் பணி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். குறை சொல்லுவது எதிர்க்கட்சித் தலைவரின் கடமை, அதைப்பற்றி கவலைப்படாமல் மக்கள் பணி செய்து வருவதில் கவனம் செலுத்துகிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
The post விழுப்புரத்தில் இதுவரை காணாத மழை.. குறை கூறுபவர்களை பற்றி கவலைப்படாமல் மக்கள் பணி செய்து வருகிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.