விழுப்புரம்: விழுப்புரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை கேட்டு இருவேல்பட்டு பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, அந்த ஆற்றின் கரையோரங்களிலுள்ள சுந்தரேசபுரம், சித்தலிங்கமடம், டி.எடையார், திருவெண்ணெய்நல்லூர், தொட்டிக்குடிசை, சின்னசெவலை, மழவராயனூர், அரசூர், இருவேல்பட்டு, காரப்பட்டு, பொய்கை அரசூர், ஆனத்தூர், சேமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.