சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, மழைக்கு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவது உட்பட பல்வேறு பாதிப்புகளுக்கான நிவாரணம், இழப்பீட்டுத் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நவம்பர் 30-ம் தேதி முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயல் காரணமாக வடமாவட்டங்களில் கனமழை பரவலாக கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.