சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் இன்று வெளியிட்ட அறிக்கை: அய்யன் திருவள்ளுவனின் புகழை ஓங்க செய்வதிலும், மங்காமல் தாங்கிப் பிடிப்பதிலும் திராவிட மாடல் ஆட்சிக்கு அளப்பெரிய பங்கு உண்டு. முக்கடல் கூடும் குமரியில் வானுயர்ந்த வள்ளுவர் சிலையை அமைத்து, அவருடைய புகழை உலக அளவிற்கு எட்ட செய்தவர் கலைஞர். தற்போது அந்த சிலை வைத்து 25 ஆண்டுகளைக் கடந்தது. வெள்ளி விழாவை தமிழ்நாடு அரசு மிகுந்த எழுச்சியோடு கொண்டாடி முடித்திருக்கிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளையும், திருவள்ளுவனையும் பெற்ற தமிழர்கள், உலகில் வாழ்வாங்கு வாழ்ந்த நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் என்பது ஏட்டிலும் உலக்கியத்திலும் மட்டுமல்ல; இன்று தொல்லியியல் அகழ்வாய்விலும் அடுக்கடுக்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. இன்று விவசாயத் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது வேதனையின் ஊச்சமாகும். விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டிய ஒன்றிய அரசோ மூன்று கடும் வேளாண் சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது.
தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை கொண்டு வந்து விவசாயத்தை ஊக்கப்படுத்திட முயற்சிக்கிறது. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் பலரது கண்ணை உறுத்திக் கொண்டிருக்கிறது. விவசாயத்தை பேணி காக்க வேண்டியது உலகளாவிய உச்ச தேவையாகும். மனித இனத்தைப் பாதுகாத்து, வாழ்வித்து வந்த இயற்கையை மனிதன் அழிக்கத் தொடங்கினான். இயற்கை மனிதனைத் திருப்பி அடிக்க தொடங்கியிருக்கிறது. பருவநிலை மாற்றம் உலகளாவிய பிரச்சினையாக ஊருவெடுத்து வருகிறது.
மக்கள் சுருண்டு விழுந்து சாகக்கூடிய அளவிற்கு வெயிலின் உச்சம். வீடுகளையும், வயல்களையும், மண்ணையும் அடித்து செல்லக்கூடிய அளவிற்கு அளவற்ற மழை, கடல் நீர்மட்டம் உயர்வு என உலகை மிரட்டிக் கொண்டிருக்கிற பருவநிலை மாற்றத்தை தடுத்தால் தான் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பான உலகை விட்டு செல்ல முடியும். எனவே ஓவ்வொருவரும் பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான உறுதியை எடுத்துக் கொள்வது தமிழ்ப் புத்தாண்டின் அர்த்தமுள்ள கொண்டாட்டமாக அமையும்.
The post விவசாயத்தை பேணி காக்க வேண்டியது உலகளாவிய உச்ச தேவையாகும்: பொன்குமார் அறிக்கை appeared first on Dinakaran.