சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைக் கிராமத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட தமிழக – கர்நாடக அதிரடிப்படையினர் விசாரணை என்ற பெயரில் மலைக் கிராம மக்கள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்தது. அதன்படி அதிரடிப்படை போலீஸாரால் பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களுக்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.