பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி சாகுபடி உள்ளது. தக்காளி, பூசணி, வெண்டை, கத்தரி, மிளகாய், நிலக்கடலை, மக்காசோளம் உள்ளிட்டவை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இதில், சுற்று வட்டார கிராமங்களில் பல விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடியிலும் தீவிரம் காட்டுகின்றனர். தற்போது, மழை இல்லாமல் இருப்பதால் வெயிலின் தாக்கத்துக்கு தக்காளி, பூசணி உள்ளிட்ட காய்கறிகள் செடியிலேயே அழுகி விடுகின்றன. ஆனால், குறைவான தண்ணீர் இருந்தாலும் செம்மண் போன்ற மணற்பாங்கான இடத்தில் மரவள்ளி கிழங்கு செழித்தோங்குகிறது. இதனாலேயே, விவசாயிகள் பலர் தங்கள் விளைநிலங்களில் மரவள்ளி சாகுபடியை தற்போது அதிகரித்துள்ளனர்.
குறிப்பாக, ஆத்துப்பொள்ளாச்சி, அம்பராம்பாளையம், போடிபாளையம், ஜமீன்ஊத்துக்குளி, கஞ்சம்பட்டி, வடக்கிபாளையம், முத்தூர், ராமநாதபுரம், தாத்தூர், தாளக்கரை, அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி அதிகமாக உள்ளது.மழைப்பொழிவு இல்லாமல் இருந்தாலும் வெயிலுக்கு தாக்குபிடித்தவாறு மரவள்ளி கிழங்கு நன்கு விளைந்துள்ளது. பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்டவை, இன்னும் ஒரு சில வாரங்களில் அறுவடைக்கு தயாராகி விடும் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு இரு பருவமழை அடுத்தடுத்து பெய்ததால் பல ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக என விவசாயிகள் தெரிவித்தனர்.
The post வெயிலின் தாக்கம் அதிகரித்தும் கிராமப்புறங்களில் மரவள்ளி கிழக்கு சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.