சென்னை: ‘அமைச்சர் பொன்முடி பேசிய வெறுப்புப் பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. எனவே, புகார் இல்லாமலேயே போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். நான்கைந்து வழக்குப் பதிவு செய்து நீர்த்துப் போகச் செய்யாமல், ஒரு புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று காவல் துறைக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
‘அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா?’ என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இது தொடர்பாக வியாழக்கிழமை மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாலை இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, “அமைச்சர் பொன்முடிக்கு எதிராக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.