திருவண்ணாமலை: 9 ஆண்டுகளுக்குப் பிறகு, செம்பரம்பாக்கம் ஏரியை நினைவுகூர்வது போன்று, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், நள்ளிரவு திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்றியது 4 மாவட்ட மக்களை துன்பத்தில் ஆழ்த்தியது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. நேற்று (டிச.1) காலை 6 மணிக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், நள்ளிரவு 12.45 மணிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்தில் இன்று (டிச.2) அதிகாலை 2.45 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடியாக கிடுகிடுவென அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும், முழு கொள்ளவான 119 அடியை நெருங்கியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.