சென்னை: வேதாரண்யத்தில் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பதில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்பு உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: எ.வ.வேலு
கஜா புயலால் சேதமடைந்த விருந்தினர் மாளிகைக்கு பதில் புதிய கட்டடம் கட்டித் தர அதிமுக உறுப்பினர் ஒ.எஸ்.மணியன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு. வேதாரண்யத்தில் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் குடிநீர் வசதி: அமைச்சர் கே.என்.நேரு
அன்னவாசல் ஜல்லிக்கட்டில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படுமா என்று சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் கே.என்.நேரு, அன்னவாசல் ஜல்லிக்கட்டில் தற்காலிகமாக டேங்கர் மூலம் குடிநீர் வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என பதில் தெரிவித்தார்.
திருப்பத்தூரில் 7 பால் குளிரூட்டும் நிலையங்கள்: அமைச்சர் ராஜகண்ணப்பன்
திருப்பத்தூரில் புதிதாக 7 பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஆம்பூர் பால் குளிரூட்டும் மையத்தை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பேரவையில் ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் தெரிவித்தார்.
7,997 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: கீதா ஜீவன்
சமூக நலத்துறையில் காலியாக உள்ள 7,997 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா கேள்விக்கு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பதில் தெரிவித்துள்ளார். அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
சிகரெட் லைட்டருக்கு தடை பரிசீலனையில் உள்ளது: தங்கம் தென்னரசு
தீப்பெட்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை நசுக்கும் சிகரெட் லைட்டருக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனையில் உள்ளது. முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் தெரிவித்தார்.
The post வேதாரண்யத்தில் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பதில் appeared first on Dinakaran.