வேலூர்: வேலூர் மார்க்கெட்டிற்கு பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறைந்துள்ளது. ஆனால் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதிகளில் இருந்து பலாப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. பலாப்பழ சீசனான ஏப்ரல் தொடங்கி ஜூன், ஜூலை வரையுள்ள காலக்கட்டத்தில் வேலூருக்கு 5 லாரிகளில் தினமும் பலாப்பழம் வரத்து இருக்கும்.
அதன்படி தற்போது பண்ருட்டி வட்டாரத்தில் இருந்து பலாப்பழங்கள் வரத்து தொடங்கியுள்ளது. நேதாஜி மார்க்கெட்டில் இன்று விற்பனைக்காக வந்த பலாப்பழங்கள் ரூ.150 முதல் ரூ.600 வரை எடைக்கேற்ப விற்பனையாகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பலாப்பழ வியாபாரிகள் கூறும்போது, ‘வேலூருக்கு இன்று 8 லாரி பலாப்பழம் வந்துள்ளது. வேலூரை பொறுத்தவரை பலாப்பழம் பெரும்பாலும் பண்ருட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்துதான் வருகிறது.
சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால், சிறு வியாபாரிகள் பலாப்பழத்தை வாங்கி செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இதனால், பலாப்பழம் விற்பனை மந்தமாக உள்ளது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பலாப்பழம் விற்பனையும் குறைய வாய்ப்பு உள்ளது.
மேலும், பலாப்பழங்களின் வரத்து அதிகரித்தால், அதன் விலையும் குறையும்’ என்றனர்.
The post வேலூர் மார்க்கெட்டிற்கு பலாப்பழம் வருகை அதிகரிப்பு: விற்பனை மந்தம் appeared first on Dinakaran.