மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு முதல் இன்ஜினாக உள்ள வேளாண்மை துறையை ஊக்குவிக்க 6 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். பிரதமரின்தான்-தான்ய கிரிஷ் திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதன்படி, குறைவான வேளாண் உற்பத்தி உள்ள 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்படும். பின்னர் அங்கு வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சம்பந்தப்பட்ட மாநிலஅரசுகளுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
ஊரக வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஒருங்கிணைந்த கிராமப்புற செழிப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, கிராம மக்கள் புலம்பெயர்வதை தடுக்கும் வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். குறிப்பாக பெண்கள், இளம் விவசாயிகள், இளைஞர்கள், குறுமற்று சிறு விவசாயிகள், நிலமற்றவர்கள் பயனடைவார்கள். பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்காக 6 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, நாபெட் மற்றும் என்சிசிஎப் உள்ளிட்ட கூட்டுறவு அமைப்புகள் 4 ஆண்டுகளுக்கு பதிவு செய்துகொள்ளும் விவசாயிகளிடமிருந்து பருப்பு வகைகளை கொள்முதல் செய்யும்.