தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகளை வரவேற்றுள்ள விவசாயிகள், எதிர்பார்த்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன்: தமிழகத்தில் 7 இடங்களில் விதை சுத்திகரிப்பு நிலையமும், ரூ.250 கோடியில் விதை உற்பத்தி நிலையமும் அமைக்கப்படும். 5 ஆயிரம் புதிய வேளாண்மை இயந்திரங்கள் வாங்கப்படும். 3,600 வாடகை இயந்திர மையங்கள் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், 4.39 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் அறிவிக்கப்பட்டு இருக்கும்போது, இதற்கான நிதி ஆதாரம் எப்படி வரும் என்பது தெரிவிக்கப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்த அறிவிப்பும் நிறைவேற்றப்படவில்லை. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. விளை பொருட்ளுக்கு உரிய விலை இல்லாமல் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். மொத்தத்தில் நிதி ஆதாரமில்லாமல் வாசிக்கப்பட்ட தமிழக பட்ஜெட், வெறும் காகிதப் பட்ஜெட் போல உள்ளது.