கிங்ஸ்மீட்: டர்பனில் நடைபெற்ற முதல் டி20 சர்வதேச போட்டியில் ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை ஹென்ரிச் கிளாசன் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி தொடரின் முதல் போட்டியில் 11 ரன்களில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 28 ரன்கள் என்ற சரிவிலிருந்து டேவிட் மில்லரின் சிக்ஸர் மழையில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் என்று முடிந்தது. டேவிட் மில்லர் 40 பந்துகளில் 4 பவுண்டரிகள் 8 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் தரப்பில் மீண்டும் பார்முக்கு வந்த ஷாஹின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளை 22 ரன்களுக்குக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் முகமது ரிஸ்வான் மட்டுமே சவாலைச் சந்தித்து 74 ரன்களை எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.