சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்குத் தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்தது வரவேற்கத்தக்கது. மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 498.80 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாகத் தமிழக அரசு அறிவித்து ஓரிரு நாளில் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என்ற அறிவிப்பு ஒட்டுமொத்த விவசாய பெருமக்களின் வயிற்றில் பால்வார்க்கும் ஒரு செய்தி.
தொடர்ந்து ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் நேரடியாகச் சென்று பார்வையிட்டு தமிழக அரசிடம் நிவாரணத் தொகையை கட்டாயம் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறோம். அந்த வகையில் தமிழக அரசு இன்றைக்கு நமது கோரிக்கைக்குச் செவி சாய்த்து ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்க இருப்பது பெரும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.
எனவே அந்த நிவாரண தொகையைக் காலதாமதம் இல்லாமல் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தி விவசாயிகளின் துயர் துடைத்துப் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்குப் பாதுகாப்பாகவும், பக்கபலமாகவும் தமிழக அரசு இருக்க வேண்டும். எனவே இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி தமிழக அரசிற்கு தேமுதிக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி appeared first on Dinakaran.