டெல்லி : தமிழ்நாட்டிற்கு புயல் பாதிப்பிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 2000 கோடியை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும் என்று மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டின் புயல் பாதிப்பு மற்றும் வெள்ள நிவாரணம் குறித்து மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா, ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையால் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் வரலாறு காணாத அளவு கொட்டி தீர்த்த கனமழையால் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டதையும் திருச்சி சிவா தெரிவித்தார். எனவே ஃபெஞ்சல் புயலுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2000 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் திருச்சி சிவா வலியுறுத்தினார். கடந்த முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு தமிழ்நாடு அரசு ரூ.37,000 கோடி கோரி இருந்ததாகவும் ஆனால் ஒன்றிய அரசு வெறும் ரூ.267 கோடி மட்டுமே வழங்கியதை குறிப்பிட்டார். எனவே கடந்த முறை போன்று இல்லாமல் தமிழ்நாடு அரசு கோரி இருக்கும் ரூ.2000 கோடியை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் திருச்சி சிவா குறிப்பிட்டார்.
The post ஃபெஞ்சல் புயலால் 1.5 கோடி மக்கள் பாதிப்பு.. இடைக்கால நிவாரணமாக ரூ. 2000 கோடியை வழங்குக : மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல் appeared first on Dinakaran.