சென்னை: “ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிக்கு நிதிக் குழுவின் பரிந்துரைப்படி ஆண்டு தோறும் வழங்கப்படும் பேரிடர் கால நிதி ரூ.945 கோடியை வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வெறும் 3.51 சதவீதம் மட்டுமே தமிழகத்துக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாற்று அரசியல் கருத்துக்கள் கொண்ட அரசியல் கட்சிகள் ஆளும் மாநிலங்களை தொடர்ந்து வஞ்சித்து வரும், மத்திய அரசின் இந்த பாரபட்ச அணுகுமுறையை ஏற்க முடியாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நவம்பர் இறுதியில் தமிழகத்தில் கரை கடந்த ஃபெஞ்சல் புயல், பெருமழையும், சூறாவளியும் சேர்ந்து 14 மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக நிலைகுலைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளில் மாநில அரசு போர்க்கால வேகத்தில் ஈடுபட்டிருந்தாலும், இயல்பு வாழ்க்கை திரும்ப குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாம் என மதிப்பிடப்படுகிறது.