புதுச்சேரி: புதுச்சேரியில் வரலாறு காணாத கடும் மழை பொழிவு காரணமாக பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நகரே வெள்ளக்காடாக மாறி உள்ளது.
இதையடுத்து புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவப் படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி வந்தனர். மேஜர் அஜய் சங்வான் தலைமையில் 6 ஜூனியர் அதிகாரிகள் மற்றும் 62 இதர ரேங்குகளை உள்ளடக்கிய பேரிடர் நிவாரண ராணுவ குழுவினர் புதுச்சேரியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.