மதுரை: அஜித்குமார் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் நிலையத்தில் வைத்து கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இளைஞர் அஜித் மரண வழக்கு இன்று காலை ஐகோர்ட் கிளையில் விசாரணை வந்தது. அப்போது; ஐகோர்ட் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி இருந்தனர்.
மேலும் இளைஞர் அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; திருப்புவனம் மாஜிஸ்திரேட் வெங்கடாபதி பிரசாத், கோவில் உதவி ஆணையர், மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் ஆகியோர் ஆஜரானர். அஜித்குமார் உடலின் பிரேதப் பரிசோதனை இடைக்கால அறிக்கையை மருத்துவக் கல்லூரி டீன் தாக்கல் செய்தார். அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்குமார் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உடலில் ஒரு பாகத்தையும் விடாமல் தாக்கப்பட்டுள்ளார். பதவி ஆணவத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அஜித்குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை. அஜித்குமார் கொலைச் சம்பவத்தில் இப்போது அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இது போன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post அஜித்குமார் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது: ஐகோர்ட் கிளை வேதனை appeared first on Dinakaran.