சென்னை: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலகினர் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். எக்ஸ் தளத்தில் அஜித் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: “தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசின் பத்மபூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் அஜித்குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திரகுமார் ஆகிய மூவருக்கும்; பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லக்‌ஷ்மிபதி ராமசுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஆர்.ஜி. சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். தத்தமது துறைகளில் தாங்கள் மென்மேலும் உயரங்களை அடைய வேண்டும், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.”